கனடாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆராய்ச்சி நிறுவனமான ETC குழுமம், “Food Barons 2022” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், சமைத்த உணவு மற்றும் மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் சிறந்த நிறுவனங்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த உணவு விநியோக நிறுவனங்களான சுவிக்கி மற்றும் ஜொமாட்டோ, இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன. சுவிக்கி நிறுவனம் 9ம் இடத்திலும், ஜொமாட்டோ நிறுவனம் 10ம் இடத்திலும் பட்டியலிடப்பட்டுள்ளன.
இணைய வர்த்தகத்தைச் சார்ந்து இயங்கும் படி, இணையம் மூலம் உணவை ஆர்டர் செய்வது, அதற்கான தொகையை இணைய வழியில் செலுத்துவது, குறைந்த நேரத்தில் வாடிக்கையாளரின் வீட்டிற்கு சென்று உணவு விநியோகம் செய்வது உள்ளிட்ட சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் குறித்து இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இதில், சீனாவின் உணவு விநியோக நிறுவனமான மீட்டான் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இங்கிலாந்தின் டெலிவரூ இரண்டாம் இடத்திலும், அமெரிக்காவின் உபர் ஈட்ஸ் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
மேலும், உணவு விநியோக நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து அந்த அறிக்கையில் பேசப்பட்டுள்ளது. பெரு முதலீட்டாளர்களின் துணையால் மட்டுமே இந்தத் துறை இயங்கி வருகிறது. கொரோனா காலத்தில் சாதகமான சூழல் நிலவிய போதும் கூட, பல நிறுவனங்கள் லாபத்தை ஈட்ட வில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், இந்தத் துறையில் பணி செய்யும் பணியாளர்களின் நிலை குறித்தும் இந்த அறிக்கை பேசுகிறது. குறிப்பாக, “பெரும்பாலான டெலிவரி பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர். அவர்கள் நிரந்தரப் பணியில் இல்லாததால், அவர்களுக்கான சமூக பாதுகாப்பு, காப்பீடு, இழப்பீடு மற்றும் இதர பணியாளர் நலப் பயன்கள் கிடைப்பதில்லை” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், “உலகின் சில அரசாங்கங்கள் பணியாளர்களுக்கான நலத்திட்டங்களை தொடங்கி உள்ளன. முதன்மையாக, அமெரிக்காவின் நியூயார்க் நகரம் உணவு விநியோகத் துறையில் பணியாற்றுபவர்களை நிரந்தரப் பணியாளர்களாக கணக்கில் கொண்டு, குறைந்தபட்ச சம்பளம் மற்றும் இதர பணியாளர் சலுகைகளை வரைமுறை செய்து சட்டம் இயற்றியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இந்த அறிக்கை, உணவு விநியோகத் துறையால் நேர்ந்துள்ள உலகளாவிய பிரச்சனையை எடுத்துக் கூறியுள்ளது. குறிப்பாக, ஒரு முறை பயன்படுத்தி குப்பைக்குச் செல்லும் பிளாஸ்டிக் கவர்கள் உபயோகம் இந்தத் துறையில் அதிகமாக காணப்படுகிறது என்றும், அதன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளது.