ஸ்விஸ் வாட்ச்களின் ஏற்றுமதி அந்நாட்டின் பெருமையாக கருதப்படுகிறது. எனவே, அது குறித்த தகவல்களை ஸ்விஸ் வாட்ச் தொழில்துறை சங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஸ்விஸ் வாட்ச்களின் மதிப்பு 34% உயர்ந்துள்ளது. மேலும், இந்திய ரூபாய் மதிப்பில், 925 கோடியாகவும், ஸ்விஸ் பிராங்க் மதிப்பில் 112 மில்லியன் ஆகவும் இந்திய இறக்குமதி மதிப்பு பதிவாகியுள்ளது.
கடந்த 2 வருடங்களாக, கொரோனா பரவல் காரணமாக, ஆடம்பர வாட்ச்கள் வாங்குவதில் இந்திய மக்களின் ஆர்வம் குறைந்திருந்தது. தற்போது மீண்டும் பழைய முறை திரும்பி உள்ளதால், இறக்குமதியும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, நடப்பு ஆண்டின் முதல் 8 மாதங்களில், இந்திய ஏற்றுமதி 114.5% உயர்ந்துள்ளது. மேலும், ஸ்விஸ் வாட்ச்கள் துறையில் இந்தியா மிக முக்கியமான நாடாக மாறியுள்ளதாக ஸ்விஸ் வாட்ச் தொழில்துறை சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், “இந்தியாவில், ஸ்விஸ் வாட்ச்களின் இறக்குமதி வரி 23% ஆகும். அத்துடன், ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாகும். இருந்தாலும் கூட, சர்வதேச விலைகளில் இருந்து வெறும் 4 - 5% உயர்வில் ஸ்விஸ் வாட்ச்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டன. அதன் காரணமாகவே இந்த சந்தை வளர்ந்துள்ளது” என்று கூறியுள்ளது.
அண்மையில், ஆடம்பர பொருட்கள் வாங்குவது குறித்து மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில், பெரும்பாலானவர்கள் ஆடம்பர வாட்ச்கள் வாங்குவதில் ஆர்வம் தெரிவித்துள்ளனர். ஆடம்பர கார்கள் மற்றும் கலைப் பொருட்கள் ஆகியவற்றை விடவும் வாட்ச்கள் வாங்குவதிலேயே மக்கள் ஆர்வம் காட்டி வருவது இந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மேலும், இந்தியாவில் ஆடம்பர வாட்ச்களின் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்களும் விற்பனை அதிகரித்துள்ளதை உறுதி செய்துள்ளனர். எனவே, இதன் மூலம், ஆடம்பர வாட்ச்கள் மீது மக்களின் மோகம் குவிந்து வருவது தெரிகிறது. மேலும், பண்டிகை கால சலுகைகள் போன்றவற்றால் வாட்ச் விற்பனை மேலும் அதிகரித்துள்ளது.
நடப்பு ஆண்டின் முதல் 8 மாதத்தில், ஸ்விஸ் வாட்ச்கள் வர்த்தகம் சராசரியாக 11% உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்க சந்தையில் 27.9 சதவீதமும், சீனாவில் 15.6 சதவீதமும், ஹாங்காங்கில் 11.3 சதவீதமும் உயர்வு பதிவாகியுள்ளது. மேலும், இந்தியாவில், 6600 கோடி ரூபாய் அளவில் ஆடம்பர வாட்ச்கள் சந்தை இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.