சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 44 பேர் பலியாகினர்.
இது குறித்து சிரியா மனித உரிமைகள் அமைப்பு கூறி இருப்பதாவது, கடந்த வெள்ளி அன்று இஸ்ரேல் சிரியாவின் அலெப்போ நகரில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் அலெப்போ சர்வதேச விமான நிலையம் அருகே நடத்தப்பட்டது. லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பின் ஏவுகணை கிடங்கை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 44 பேர் பலியாகினர். அவர்களில் 36 பேர் சிரியா ராணுவத்தினர் ஆகும். ஏழு பேர் ஹிஸ்மில்லா படையை சேர்ந்தவர்கள். இந்த தாக்குதலை சிரியா ராணுவம் உறுதி செய்துள்ளது. இது குறித்து ராணுவம் கூறி இருப்பதாவது, இந்த தாக்குதலில் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரேல் எந்த அறிக்கையும் இதுவரை வெளியிடவில்லை. சிரியாவில் ஈரான் ராணுவ ரீதியில் செல்வாக்கு பெறக்கூடாது என்று இஸ்ரேல் எப்பொழுதுமே கூறி வருகிறது. எனவே இது போன்ற தாக்குதலுக்கு இஸ்ரேல் வெளிப்படையாக பொறுப்பேற்பதில்லை.