சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தங்கள் நாட்டு இளைஞர்களுக்கான கட்டாய ராணுவ சேவைக் காலத்தை ஓராண்டாக உயர்த்த தைவான் முடிவு செய்துள்ளது.
தைவான் எல்லைப் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக சீன ராணுவம் அவ்வப்போது ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக தைவான் - சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், தைவானில் காட்டாய ராணுவ சேவைக் காலத்தை ஓர் ஆண்டாக உயர்த்த அந்நாட்டு அதிபர் சாய் இங்-வென் முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து தைவான் அதிபர் சாய் இங்-வென் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, ”2024-ஆம் ஆண்டு முதல் தைவானில் கட்டாய ராணுவ சேவை நான்கு மாதத்திலிருந்து ஓர் ஆண்டாக உயர்ந்தப்படுகிறது. தைவான் அமைதியை விரும்புகிறது. ஆனால், தற்காப்பு என்பது அவசியம். தைவான் ராணுவ அளவில் பலமாக இருக்கும் வரை, அது உலகம் முழுவதும் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் தாயகமாக இருக்கும்” என்றார்.