காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியையொட்டி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின்(பிஎச்யூ) மைய நூலகத்தில் அரிய தமிழ் நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் கண்காட்சி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிஎச்யூ வளாகத்தில் நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்கமத்தின் ஒரு பகுதியாக சாயாஜி ராவ் கெய்க்வாட் மைய நூலகத்தின் சார்பில் அரிய தமிழ் நூல்கள் மற்றும் ஓலைச்சுவடி கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியை பாரதிய பாஷா சமிதியின் தலைவரும் காசி தமிழ்ச் சங்கமத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான பத்மஸ்ரீ சாமுகிருஷ்ண சாஸ்திரி நேற்று துவக்கி வைத்தார்.
கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய கிருஷ்ணசாஸ்திரி, மத்திய நூலகத்தில் 1890-கள் தொடங்கி வெளிவந்த பல்வேறு தமிழ் நூல்கள், 17, 18-ம் நூற்றாண்டுகளில் தமிழ் கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்ட 12 ஓலைச்சுவடிகள் ஆகியவை கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இந்த பழமையான அரிய ஆவணங்கள் பல்கலைக்கழக நூலகத்தில் முறையாக பாதுகாக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார்.














