2025-ம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டம் ஜனவரி 6-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 9 மற்றும் 10 தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த ஆண்டின் குளிர்கால கூட்டம் குறுகிய நாட்களே நடைபெற்றது. இதன் போது, மதுரை மேலூர் அருகே டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமத்தை உடனே ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 19 சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டு, கூட்டத் தொடர் முடிவடைந்தது. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டம் ஜனவரி 6-ந்தேதி தொடங்க இருக்கிறது. சட்டசபை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை கூட்டத்தொடர் குறித்து நிருபர்களிடம் விளக்கமாக கூறியதாவது, "தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வருகிற ஜனவரி 6-ந்தேதி சட்டசபையை கூட்டி உரை நிகழ்த்த உள்ளார். அந்த தினம், கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதையும் அலுவலரீதியாக முடிவு செய்யப்படும்," என்று தெரிவித்துள்ளார்.