ரூ.81 கோடி செலவில் பேனா சின்னம் அமைப்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் . ரூ.81 கோடி செலவில் 42 மீட்டர் உயரத்தில், 2.21 ஏக்கர் பரப்பளவில் மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்துக்கு அருகே கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் பேனா நினைவு சின்னம் அமைக்க தடை விதிக்க கோரி திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் கடல் பரப்பில் சிலைகள் அமைப்பது மற்றும் நினைவாலயங்கள் அமைப்பதை தடை செய்ய வேண்டும். கருணாநிதி நினைவாலய கட்டிடப் பணிகள் மற்றும் கடலுக்குள் கட்ட உள்ள பேனா நினைவு சின்னத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கில் 8 வாரத்தில் மத்திய, மாநில அரசுகள், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகங்கள் பதில் அளிக்க உத்தரவிட்டது.