டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழக அரசின் ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவியேற்று முதன் முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுடன் உரையாற்றுவார். அன்றைய தினம் பல்வேறு மாநிலங்களின் அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான அணிவகுப்பு நடைபெறும். கடந்த ஆண்டு தமிழ்நாடு அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு பங்கேற்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
7 கட்டமாக நடைபெற்ற தேர்வுகளின் இறுதியாக 16 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 16 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அலங்கார ஊர்திகளை அமைக்கும் பணியை தொடங்க ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.