தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று தொடங்குகிறது.
சட்டப்பேரவையில் வழக்கமாக ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில், இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. கடந்தாண்டு சட்டப்பேரவை முதல் கூட்டம் கரோனா பரவல் காரணமாக கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு வழக்கமான புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள பேரவைக் கூட்ட அரங்கிலேயே நடத்தப்படுகிறது.
தமிழக அரசின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து பாராட்டியும், சில புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளும் ஆளுநர் உரையில் வெளியாக வாய்ப்புள்ளது. மேலும், தமிழக அரசின் எதிர்பார்ப்புகள் குறித்து மத்திய அரசுக்கு சில வலியுறுத்தல்களையும் அவர் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.