தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் யூ. பி. ஐ (UPI) மூலம் கட்டணம் செலுத்தும் வசதியினை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் இணையவழி சேவையினை மேம்படுத்தும் பொருட்டு, கையடக்க கருவிகள் (PoS) மூலம் கட்டண சீட்டுகள் வழங்கும் முறை கொண்டுவரப்பட்டது. ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மை திட்டத்தின் கீழ், கட்டண சீட்டு மையங்களில் பக்தர்களிடமிருந்து கட்டணத்தை ரொக்கமாக பெற்றுக்கொண்டு கையடக்க கருவிகள் (PoS) மூலம் கட்டண சீட்டுகள் வழங்கும் முறை கடந்த 28.04.2022 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவால் தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் மூலம் 471 திருக்கோயில்களுக்கு 1,550 கையடக்க கருவிகள் வழங்கப்பட்டது. இதுவரை 51,32,265 பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு 22.91 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. மின்னணு பணப் பரிமாற்றத்தினை ஊக்குவிக்கும் வகையிலும் கடன் அட்டை (Credit Card), பற்று அட்டை (Debit Card) மற்றும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) மூலமாக கையடக்க கருவிகளில் (PoS) கட்டணம் செலுத்தும் வசதியினை இன்று (29.09.2022) இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இந்த சேவை பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தேசிய தகவலியல் மையத்துடன் இணைந்து இந்து சமய அறநிலையத்துறையின் ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மைத் திட்ட மென்பொருள் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இதனை திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.