தமிழகத்தில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாக காணப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு 4,5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக ஈரோடு, சேலம், தர்மபுரி, வேலூர்,திருச்சி, கரூர்,மதுரை, திருப்பத்தூர், கோவை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியசுக்கும் மேல் சுட்டெரித்து வருகிறது. மேலும் அடுத்த நான்கு நாட்களுக்கும் ஒரு சில இடங்களில் இயல்பை விட வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் கூறுகையில் தமிழகத்தில் வட உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் எனவும் சேலம், ஈரோடு,நாமக்கல் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் இதே வெப்பநிலை நீடிக்கும் எனவும் கோடை மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கத்திரி வெயில் என்று சொல்லக்கூடிய அக்னி நட்சத்திரம் மே நான்காம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை உள்ளது .இக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.