தமிழகத்தின் முதலாவது திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் இயற்கை எரிவாயு வினியோகத்தை குழாய் வழியே வழங்க, அனைத்து மாவட்டங்களிலும் உட்கட்டமைப்பை உருவாக்குவதற்கான அங்கீகாரத்தை ஏழு நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், ராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களில், இதற்கான அங்கீகாரம் 'ஏஜி அண்டு பி பிரதம்' நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், தமிழகத்தில் 222 பகிர்மான நிலையங்கள் மற்றும் ஏழு லட்சம் வீடுகளுக்கு குழாய் வழியே இயற்கை எரிவாயு வழங்கும் பணியை எட்டு ஆண்டுகளில் செய்ய உள்ளது.
தற்போது ஏஜி அண்டு பி பிரதம் நிறுவனம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாந்தாங்கல் கிராமத்தில் தமிழகத்தின் முதலாவது திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தை அமைத்துள்ளது. இந்த எரிவாயு நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதன் மூலம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 70 பகிர்மான நிலையங்களுக்கும், 30 ஆயிரம் வீடுகளுக்கும், குழாய்கள் வழியே இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, காந்தி, தலைமை செயலர் இறையன்பு, தொழில் துறை செயலர் கிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.