செப்டம்பர் மாத தொடக்கத்தில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் பொது பங்கீடு நடந்தது. பொது பங்கீட்டின் இறுதி நாள் நிலவரப்படி, 2.86 மடங்கு முதலீடு கூடுதலாகப் பதிவானது. அத்துடன், சில்லறை முதலிடாலர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகள் 6.48 மடங்கு கூடுதலாக வாங்கப்பட்டன. பொது பங்கீடு முடிந்து, முதன் முதலாக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் பங்குகள், இன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன.
முதல் நாளான இன்று, பங்குகளின் வெளியீட்டு விலையை விட 3% பங்கு மதிப்பு குறைந்துள்ளது. பொதுப்பங்கீட்டின் போது ஒரு பங்கின் விலை 510 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தேசிய பங்குச் சந்தையில் ஒரு பங்கின் விலை 495 ரூபாய் என்று பட்டியலிடப்பட்டிருந்தது. மும்பை பங்குச்சந்தையில் 510 ஆக முதலில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், பங்கு விலை 484 ரூபாயாகச் சரிந்தது.
பொதுப் பங்கீட்டின் போது ஒரு பங்கின் விலை 500 முதல் 525 ரூபாய் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பொதுப் பங்கீடு வாயிலாக 831.6 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இந்தத் தொகை நிறுவனத்தின் கடனை அடைப்பதற்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, நிறுவனத்தின் பங்கு மதிப்பு குறைந்துள்ளது முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.