தென்மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி,தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நெல்லை மாவட்ட அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் ஏராளமான குடியிருப்புகள் நீரில் மூழ்கியது. மேலும் பெரும்சேதம் ஏற்பட்டது. தற்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் அவ்வப்போது மழை பெய்ய தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நேற்று பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. ஏற்கனவே அனைத்து அணைகளும் நிரம்பிவிட்ட நிலையில் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மழை அதிகரிக்கும் போது அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே தாமிரபரணி ஆற்றில் பொதுமக்களை பாதிக்கும் வகையில் வெள்ளம் ஏற்படவில்லை என்றாலும் முன்னெச்சரிக்கையாக மக்கள் ஆற்றில் குளிக்கவோ, செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.