டாடா குழுமத்தின் இணைய வழி வணிகத் தளமான டாடா கிளிக், அழகு சாதனப் பொருட்கள், ஃபேஷன் தொடர்பான பொருட்கள், மின்னணு சாதனங்கள் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. தற்போது, ஃபேஷன் மற்றும் அழகு சாதனம் தொடர்பான பொருட்களின் விற்பனைக்கு, நேரடி கடைகளைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, இந்த தளத்தில் உயர்ரக பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேரடி கடைகளிலும் இதே முறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, டாடா கிளிக் நிறுவனத்தின் அழகு சாதனத் துறையின் போட்டியாக, Nykaa, NewU போன்ற நிறுவனங்களும், ஃபேஷன் துறையின் போட்டியாக Myntra நிறுவனமும் செயல்பட்டு வருகின்றது. இவற்றில் நைக்கா, மிந்த்ரா ஆகிய நிறுவனங்கள் இணைய வர்த்தகம் மட்டும் இன்றி, நேரடி கடைகள் மூலமான வர்த்தகத்திலும் ஈடுபடத் துவங்கி உள்ளன. அத்துடன், சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி பலரும், பழைய அலுவலக முறைக்கு மாறி உள்ளதால், அழகு சாதனப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அத்துடன், இணைய வர்த்தகத்திற்குப் பதிலாக, நேரடி வர்த்தகத்தை நாடும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனவே, தனது வர்த்தகத்தை மேலும் அதிகரிக்க, டாடா நிறுவனம், நேரடி வர்த்தகத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
டாடா கிளிக் தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் மின்னணு சாதனங்கள், இனிமேல், டாடா குரோமா தளத்துடன் முழுமையாக இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், டாடா கிளிக் செயல்பாட்டிற்காக பிரத்தியேகமாக 'டாடா கிளிக் பேலட்' என்ற புதிய செயலி உருவாக்கப்படுகிறது. அத்துடன், இது டாடா நியூ என்ற சூப்பர் செயலியில் இணைக்கப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. டாடா கிளிக்கின் இந்த நேரடி வர்த்தகம், முதல் கட்டமாக மெட்ரோ நகரங்களிலும், அடுத்த கட்டமாக இந்தியாவின் பிற முக்கிய நகரங்களிலும் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.













