டாடா குழுமம் 2022-23 ஆம் நிதியாண்டில், வரலாற்று வளர்ச்சியை பதிவு செய்யும் என்று டாடா சன்ஸ் சேர்மன் என். சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும், நடப்பு நிதியாண்டில், டாடா குழுமத்தின் வருடாந்திர வளர்ச்சி 20% வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளார்
“டாடா போன்ற பெரிய நிறுவனத்திற்கு 20% வருடாந்திர வளர்ச்சி மிகவும் முக்கியமானது. மேலும், எங்கள் குழுமத்தின் ஒட்டுமொத்த லாபம் மற்றும் பணப்புழக்கம் மிகவும் வலிமையாக உள்ளது. அத்துடன், பாரம்பரிய வர்த்தகங்கள் மற்றும் புதிய முயற்சிகள் என நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளிலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைந்துள்ளோம்” என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது உடன் இருந்த ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் வளர்ச்சி திருப்தி அளிப்பதாக உள்ளது என்று கூறினார். மேலும், சந்திரசேகரின் தலைமை பொறுப்பு மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டி பரிந்துரைத்தார். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் டாடா குழுமம், நிகழாண்டில் பல முக்கிய முதலீடுகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.














