நவம்பர் 7ஆம் தேதி முதல், நிறுவனத்தின் பயணிகள் வாகன விலைகள் உயர்த்தப்படுவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. மேலும், வாகனத்தின் விலையில் 0.9% விலை உயர்வு இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன், விலையேற்ற விகிதம் ஒவ்வொரு வாகன மாடலுக்கும் வேறுபடும் எனவும் கூறியுள்ளது.
வாகனத் தயாரிப்புக்கான மொத்த செலவுகள் அதிகரித்த போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், வாகனங்களுக்கான உள்ளீட்டு செலவினங்களை ஏற்றுக் கொண்டது. இதனால், வாகனங்களின் விலைகள் உயர்த்தப்படாமல் இருந்தது. ஆனால், இந்த செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே வேளையில், மற்றொரு புறம், உற்பத்தி செலவும் கடுமையாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்த விலை ஏற்றங்களை சமாளிக்கும் வகையில், “குறைந்தபட்ச விலை உயர்வு” என்ற நடவடிக்கையை மேற்கொள்ள நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ, பன்ச், நெக்ஸான், ஹரியர், சபாரி உள்ளிட்ட மாடல்களில், விலைகள் உயர்த்தப்படும் என்று கருதப்படுகிறது. இந்தியச் சந்தையில், இந்த வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.