போர்டு நிறுவனத்தின் சார்பில் குஜராத் மாநிலத்தின் சனந்த் பகுதியில் உற்பத்தி நிலையம் இயக்கப்பட்டு வருகிறது. இதனை வரும் ஜனவரி 10ஆம் தேதிக்குள் முழுமையாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கையகப்படுத்த உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், டாடா மோட்டார்ஸ் -ன் பயணிகள் வாகன மற்றும் மின்சார வாகன பிரிவு, போர்டு இந்தியாவின் சனந்த் உற்பத்தி மையத்தை சுமார் 725.7 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்துவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
சனந்த் உற்பத்தி நிலையத்தின் நிலம், கட்டுமானம் மற்றும் தொழில்நுட்ப கருவிகள் அனைத்தையும் டாடா மோட்டார்ஸ் வாங்கியுள்ளது. இதற்கான அரசாங்க ஒப்புதல்கள் பெறப்பட்டு, ஜனவரி 10ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக டாடா மோட்டார்ஸ் இந்த நிலையத்தை இயக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையத்தின் மூலம், வருடத்திற்கு, கூடுதலாக 3 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் என கருதப்படுகிறது.