கடன் பத்திரங்கள் மூலமாக, 2000 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட உள்ளதாக டாடா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை அன்று நிறுவனத்தின் நிர்வாகிகள் குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. அதன் பின்னர், நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடன் பத்திரங்கள் குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இரண்டு பிரிவுகளில் மாற்ற முடியாத கடன் பத்திரங்களை டாடா ஸ்டீல் நிறுவனம் வெளியிட உள்ளது. முதல் பிரிவில், 10 லட்ச ரூபாய் மதிப்பிலான 5000 கடன் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம், 500 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட உள்ளது. இரண்டாவது பிரிவில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 15,000 கடன் பத்திரங்கள் வெளியிடப்பட உள்ளன. இதன் மூலம், 1500 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட உள்ளது.
அத்துடன், செப்டம்பர் 20ஆம் தேதி, கடன் பத்திரங்களுக்கான ஒதுக்கீடு தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முதல் பிரிவுக்கான முதிர்வு தேதி, 2027 ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி என்றும், இரண்டாவது பிரிவுக்கான முதிர்வு தேதி 2032 ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது