இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் - டிசிஎஸ் நிறுவனம், தனது நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, நிறுவனத்தின் இலக்கு மற்றும் வருவாய் ஆகியவை, கணிப்பை விட குறைவாக பதிவாகியுள்ளன. ஒப்பந்தங்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டிய போதும், வருவாய் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ் பங்குகள் 1.63% சரிவை சந்தித்தன.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னணியில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த அறிக்கை, மற்ற நிறுவனங்களையும் பாதித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக, ஹெச் சி எல் டெக் நிறுவனத்தின் பங்குகள் 2.07% சரிந்து, 1071.85 ரூபாய்க்கு வர்த்தகமாயின. விப்ரோ நிறுவனத்தின் பங்குகள், 1.28% சரிந்து, 368.3 ரூபாய்க்கும், டெக் மஹிந்திரா நிறுவனத்தின் பங்குகள், 2.08% சரிந்து, 1086.85 ரூபாய்க்கும், வர்த்தகம் ஆயின. உச்சமாக, இன்போசிஸ் நிறுவனம் 2.74% சரிவை சந்தித்து, 1389.2 ரூபாய்க்கு வர்த்தகமானது.