ஹைதராபாத், ஏப்ரல் 28, 2022:
இளைஞர்கள் மற்றும் பெண் தொழிலதிபர்களுக்கு, தொழில்நுட்ப உதவிகள் மற்றும் நிதி உதவிகள் வழங்கும் நோக்கில், தெலுங்கானா மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சிகள் மற்றும் நிதி மேலாண்மை குறித்த பயிற்சிகள், அரசுப்பள்ளிகளை நவீன மயமாக்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக, கச்சிபோலி என்ற இடத்தில், 7.3 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை வாங்கியுள்ள கூகுள், அங்கு மூன்று மில்லியன் சதுர அடியிலான கட்டடத்தை எழுப்ப தீர்மானித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கே டி ராமாராவ் இதற்கு அடிக்கல் நாட்டினார். கூகுளின் துணை தலைவர் சஞ்சீவ் குப்தா, இது குறித்து பேசுகையில், இது போன்ற வளர்ச்சித் திட்டங்களில் அரசுடன் இணைத்துப் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். மேலும், இந்தத் திட்டம் மூலமாக நல்ல மாற்றங்களை கொண்டுவர முடியும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.