இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு, கனடா நாட்டில் மேலும் ஒரு இந்து கோயில் அவமதிக்கப்பட்டுள்ளது. ஒன்டோரியோ மாகாணத்தில் உள்ள வின்சர் பகுதியில் அமைந்துள்ள இந்து கோவிலில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக வின்சர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக இருவரை சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் அளித்த தகவலின் படி, கோவிலை அவமதித்தவர்கள் தொடர்பாக காணொளி ஆதாரம் கிடைத்துள்ளதாகவும், அதில் ஒருவர் கோவில் மதில் சுவரில் இந்து வெறுப்பு வாசகங்களை எழுதியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணொளியில் காணப்படும் இருவரின் அடையாளங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், கனடா நாட்டில், தொடர்ந்து இந்து கோயில்கள் அவமதிப்பிற்குள்ளாகி வருவது கவலை அளிப்பதாக உள்ளதாக, வெளிநாடு வாழ் இந்துக்கள் கூறியுள்ளனர்.