சீனாவின் ஷாங்காய் நகரில், புதிய பேட்டரி தொழிற்சாலை ஒன்றை தொடங்க உள்ளதாக டெஸ்லா அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான மோதல் சூழலுக்கு மத்தியில், டெஸ்லாவின் இந்த அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.
ஷாங்காயில் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார வாகன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் அமைக்கப்பட உள்ள புதிய கட்டமைப்பில் பேட்டரி தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலையை தொடங்கி வைக்க, எலான் மஸ்க், இந்த வார இறுதியில், சீனாவிற்கு பயணம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. இவ்வருட இறுதியில், கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு, 2024 ஆம் ஆண்டில் உற்பத்தி தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
மெகாபேக் எனப்படும் ராட்சச பேட்டரிகள் இங்கு தயார் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம், ஒரு மணி நேரத்திற்கு, கிட்டத்தட்ட 3600 வீடுகளுக்கு மின்சாரம் கொடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 10000 மெகாபேக் பேட்டரிகளை இங்கு உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.














