தைப்பூசம் மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் அதிகமான பயணிகள் செல்லவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயங்கும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 380 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பிப். 8 (சனிக்கிழமை) அன்று 530 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 60 பஸ்களும், சனிக்கிழமை 60 பஸ்களும் இயக்கப்படவுள்ளன.
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்ல 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மாதவரத்தில் இருந்து நாளை 20 பஸ்களும், சனிக்கிழமை 20 பஸ்களும் இயக்கப்படும். ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்ப கூடுதல் வசதி செய்ய அனைத்து இடங்களிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. தற்போது, வெள்ளிக்கிழமை 11,336 பயணிகள், சனிக்கிழமை 634 பயணிகள், ஞாயிறு 8,864 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.