அறிவியல் பெரும் வளர்ச்சி அடைந்து விட்ட இக்காலத்தில், நாம் வாழும் இந்த பூமியைப் பற்றிப் பல ஆய்வுகள் நடத்தப் படுகின்றன. இன்றைய ஆய்வுகளின் மூலம் கண்டுணரப்படும் உண்மைகளைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது சங்க இலக்கியப் பாடல்கள் கூறிவிட்டன.
உலகில், பருப் பொருட்கள் அனைத்தும் ஐம்பெரும் பூதங்களால் உருவானவை என்ற கருத்தியல், சங்கத் தமிழரிடம் ஆழமாக ஊடுருவியிருந்தது. மேலும், உலகில் உயிர்கள் தோன்றியப் பரிணாம படி நிலையையும் அறிந்திருந்தனர்.
"நீரு நிலனுந்தீயும் வளியு
மாக விசும்போடு ஐந்தும் உடனியற்ற"
என்ற மதுரைக்காஞ்சிப் பாடல் வரியும்
"மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புவதைவரு வளியும்
தீமுரணிய நீருமென்றாங்கு
ஐம்பெரும் பூதத்தியற்கை"
என்றப் புறநானூற்றுப் பாடலும்
"நிலம் தீ நீர்வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்"
என்றத் தொல்காப்பியப் பாடல் வரியும் உலகத்தின் ஐம்பெரும் கூறுகளைத் தெளிவாக விளக்குகின்றன.
உலகமானது நிலம், தீ, நீர், வளி, விசும்பு என்னும் ஐந்து பூதங்களும் கலந்தது என்றுக் கூறியிருப்பது பண்டைத்தமிழரின் இயற்கைப் பற்றியப் புரிதலை எடுத்துக் கூறுகிறது. விசும்பு என்பது வெற்றிடம் என்று பொருள் படும். வெற்றிடம் என்ற ஒன்றை நவீன அறிவியல் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தான் அறிந்தது. ஆனால் தொல்காப்பியர் இதனை முன்னரே பாடலாகப் பாடியுள்ளார்.
மலையில் பொழிந்த மழைநீர், காட்டில் அருவியாகிச் சமவெளியில் ஆறாகப் பரந்து பாய்ந்து, கடலில் கலக்கிற இயற்கைச் செயல்பாடுதான், நிலப் பாகுபாட்டிற்கான ஆதாரம். மலை, காடு, வயல், கடலோரம் என்ற நான்கு வகையான நிலங்களே உலகம் எனக் கண்டறிந்த சங்கத் தமிழர் "நானிலம்" என வகைப் படுத்தினர். திணைக் கோட்பாடு உருவாவதற்கு இதுவே அடிப்படையாக அமைந்தது.
இவ்வாறு உலகத்தின் இயக்கத்திற்குத் தேவையான அனைத்துக் கூறுகளும் உண்டானதும் உயிர்கள் தோன்றின. இவ்வாறு தோன்றிய உயிர்களின் பரிணாம வளர்ச்சியைத் தொல்காப்பியம் ஓரறிவு உயிரினம் முதல் ஆறறிவு உயிரினம் ஈறாக வகைப் படுத்துகிறது. பரிணாம வளர்ச்சியைப் பற்றி பதினேழாம் நூற்றாண்டில்தான் நவீன அறிவியல் சிந்திக்கவே தொடங்குகிறது. ஆனால் 2000 வருடங்களுக்கு முன்னர் எழுதியத் தொல்காப்பியம் அதனைப் பற்றி எடுத்தியம்புகிறது.
"ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே;
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே;
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே;
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே;
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே;
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே;-
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே"
என்பதே அந்தப் பாடல். உலகில் முதன் முதலில் தாவர இனங்கள் தோன்றின. அவற்றுக்கு 'உற்றறிதல்' என்ற ஒரே ஒரு அறிவு மட்டும் இருந்தது. இதனையே
"புல்லும் மரனும் ஓர் அறிவினவே" என்கிறது தொல்காப்பியம். தாவரங்களுக்குப் பின்னர் உருவானவை நத்தை, சங்கு, சிப்பி போன்றவை. அவற்றிற்கு, உற்றறிகிற அறிவோடு சேர்த்து, சுவை அறியும் திறனும் இருந்தது. அதன் பின்னர் உருவான எறும்பினங்களுக்கு இவ்விரண்டு அறிவுகளுடன் சேர்த்து, மோப்ப சக்தியும் இருந்தது. இதனையே
"நந்தும் முரளும் ஈர் அறிவினவே;
சிதலும் எறும்பும் மூ அறிவினவே"
என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அடுத்தப் பரிணாம வளர்ச்சியின் நிலையாக மூன்று அறிவுகளுடன் சேர்த்து நான்காவதாக தன்னைச் சுற்றி உள்ளவற்றைக் கண்ணால் காணும் திறன் ஏற்பட்டது. அதனைக் கொண்ட நண்டு மற்றும் தும்பி போன்ற உயிரினங்கள் நான்கறிவு உடையதாக அறியப்பட்டன.
"நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே"
அதன் பின்னர்த் தோன்றிய விலங்குகள், பறவைகள் போன்றவற்றிற்குக் கூடுதலாக ஓசையைக் கேட்டுணரும் திறன் உண்டானது என்பதை
"மாவும் மாக்களும் ஐஅறிவினவே"
என்கிறது தொல்காப்பியம். பரிணாம வளர்ச்சியின் இறுதி நிலையாகப் பகுத்தறியும் திறன் கொண்ட மனித இனம் தோன்றியது. இதனை
"மக்கள்தாமே ஆறு அறிவு உயிரே" என்று கூறியதுடன், மனிதனுக்குச் சிறிது குறைவான அறிவுத்திறன் கொண்டவையாக அறியப்படும் குரங்கு; விலங்குகளைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்ட கிளி போன்றவையும் கூட பரிணாம வளர்ச்சியின் அங்கமாக தொல்காப்பியம் வகுத்துக் கூறுகிறது.
"பிறவும் உளவே, அக் கிளைப் பிறப்பே" என்ற பாடல் வரி இதனை விளக்குகிறது.
இன்றைய அறிவியலுக்குத் தமிழினம் முன்னோடியாக இருந்துள்ளது என்பதற்கு இவையனைத்தும் மற்றொரு சான்றாக அமைகின்றன.














