தன் வாழ்வின் பெரும் பகுதியைத் தமிழுக்காகவே கழித்தவர் “தமிழ்த்தாத்தா” என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயர் ஆவார். தமிழ் மொழியின் பழம்பெருமையைப் பற்றித் தமிழர்களே அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், தமிழின் பெருமையை உலகம் அறியச் செய்யப் பிறந்தவரே உ.வே.சாமிநாத ஐயர். உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் என்பதே சுருக்கமாக உ.வே.சா. என்றானது.
1855ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி வேங்கடசுப்பையர் - சரசுவதி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்த உ.வே.சா., தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த தமிழறிஞர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார். அந்நாளில் பழந்தமிழ் சுவடிகளைக் கற்பவரும் இல்லை, அவற்றைப் பாதுகாக்க நினைப்பவரும் இல்லை என்ற நிலை நிலவியது. ஆனால் தமிழின் பெருமையை அறிந்த உ.வே.சா., சுவடிகளில் உள்ள தமிழ் பொக்கிஷங்களை அச்சில் பதிப்பிக்கும் எண்ணம் கொண்டார். பல அருமையானச் சுவடிகள் கரையான்கள் அரிக்கப்பட்ட நிலையில் இருக்கக் கண்டு மனம் புண்பட்டார். ஆனால் அவருடைய வறுமை நிலை அவருக்குத் தடையாக இருந்தது. வறுமை நிலையிலும் இவரது தமிழ் ஆர்வத்தைக் கண்டு வியந்த தருமபுரம் ஆதீனத்தின் தலைவராக இருந்த ஸ்ரீ மாணிக்கவாசகதேசிகர், ஆதீனத்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட சுவடிகளைக் கொடுத்து உதவினார்.
அக்காலத்தில் பிரதிகளை அச்சில் பதிப்பதற்கு முன்பு ஊர்ஊராகத் தேடி, கிடைக்கும் நகல்களையெல்லாம் பெற்று, அவற்றையெல்லாம் நன்கு படித்து, ஒப்பு நோக்கி, அவற்றுக்குள் வேறுபாடு இருந்தால், எது சரியானது என்று தீர்மானித்துப் பதிப்பிக்க வேண்டும். உ.வே.சா. இவ்வாறுதான் அனைத்துத் தமிழ் நூல்களையும் பதிப்பித்தார். அத்தோடு, சிதைந்து மறைந்துவிட்ட சொற்களையும் அடிகளையும் அறிந்து, உணர்ந்து, முழுப்பொருள் விளங்கும்படி சேர்த்துப் பதித்தார். அது மட்டுமல்லாது, ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பு போன்ற செய்திகளையும் தொகுத்து வழங்கி, நூல்களைக் குறித்த முழுமையானப் புரிதலுக்கும் வழிவகுத்தார். அக்காலத்தில் எவ்வித வாகனப் போக்குவரத்து வசதிகளும் இல்லாமல் தமிழ்ச் சுவடிகளைத் தேடி நூற்றுக்கணக்கான மைல்கள் உ.வே.சா பயணம் செய்துள்ளார். தங்குவதற்கு, உணவு உண்பதற்கு வசதியில்லாத போதும், கிராமம் கிராமமாகச் சென்று, தெரிந்தவர்கள் வீட்டில் தங்கி, கிடைத்ததை உண்டு, பண்டையத் தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் தன்னலம் பாராது ஈடுபட்டார்.
வறுமையிலும் தன்னுடைய சொத்துக்களை விற்று, பல தமிழ் இலக்கிய நூல்களை உ.வே.சா பதிப்பித்தார். அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பல இவரால் புத்துயிர் பெற்றன. சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் என 90க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார். அவர் தோன்றியக் காலத்தில் இருந்த தமிழின் நிலைக்கும் அவர் மறைந்த காலத்தில் உயர்ந்து நின்ற தமிழின் நிலைக்கும் பெரிய வேறுபாடுள்ளது. சங்க இலக்கியங்களைப் பற்றியும் சங்ககால மக்களின் வாழ்க்கை, பண்பாடு போன்றவற்றைப் பற்றியும் இன்று நம்மால் பேசமுடிவதற்கு உ.வே.சாவின் உழைப்பே காரணமாகும்.
உ.வே.சா. பதிப்பித்த நூல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். “சங்க நூல்கள்’, “பிற்கால நூல்கள்’, “இலக்கண நூல்கள்’, புராணம் அல்லது காவிய நூல்கள். இவர் முதன் முதலில் பதிப்பித்த நூல் “சீவகசிந்தாமணி’. அது ஒரு சமண சமயத்தைத் தழுவிய நூல் என்பதால் அதைப் பதிப்பிக்கப் பலர் தடையாக இருந்தனர். ஆனால் தமிழ் மொழி இனம், சமயம் போன்ற வட்டத்திற்குள் என்றுமே அடங்காது என்பதில் அவர் உறுதியாக இருந்து அந்நூலைப் பதிப்பித்தார். பின்னர், சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, புறநானூறு, மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைப்படுகடாம் போன்ற சங்ககால இலக்கிய நூல்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமான நூல்களைப் பதிப்பித்து வருங்காலத் தலைமுறைக்குத் தமிழை அறிமுகப்படுத்தினார்.
உ.வே.சா முதன் முதலில் "தமிழ்த்தாத்தா" என்று அழைக்கப்பட்டது காந்தியடிகளின் முன்னிலையில்தான். 1937-ஆம் ஆண்டு, சென்னையில் மகாத்மா காந்தி தலைமையில் நடைப்பெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து உ.வே.சா. உரை நிகழ்த்தினார். அந்த உரையைக் கேட்ட மகாத்மா, “இந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்தவண்ணம் நான் தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வமிகுதிதான் என்னிடம் எழுகிறது’ என்றார். அந்த மாநாட்டின் போது தான் உ.வே.சா "தமிழ் தாத்தா" என்று முதன் முதலில் அழைப்பட்டார்.
உ.வே.சா. தமிழ் நூல்களைப் பதிப்பித்தது மட்டுமின்றி தானே பல நூல்களையும் இயற்றியுள்ளார். சிறு வயதில், தந்தையாரின் வறுமையைக் கண்டு வருந்தி, ஒரு பெரியமனிதரிடம் சென்று நெல் வேண்டி இயற்றிய செய்யுள் தான் அவர் இயற்றிய முதல் செய்யுள் ஆகும். கலைமகள் துதி, திருலோகமாலை, ஆனந்தவல்லியம்மை பஞ்சரத்தினம் முதலியன அவர் இயற்றிய மற்ற செய்யுள் நூல்களாகும். மேலும், சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றோடு, மணிமேகலை, குறுந்தொகை நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். இன்றளவும் சங்க இலக்கிய நூல்களில் சிறந்த உரை நூலாக உ.வே.சா எழுதிய மணிமேகலையை தமிழறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
இறுதியாக 1940ஆம் ஆண்டு “என் சரித்திரம்’ என்ற பெயரில் தனது வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் ‘தொடராக’ எழுதத் தொடங்கினார். அந்த நூலில் தமிழ் வளர்ச்சி, தமிழ் நாட்டின் வரலாறு, அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள், புரவலர்கள், ஆதீனத் தலைவர்கள் ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கியிருந்தன. இந்நூல் முழுமையடைவதற்கு முன்னரே 1942ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் நாள் உ.வே.சா இயற்கை எய்தினார்.
இவர் தமிழுக்குச் செய்த தொண்டுகளின் பெருமையை உணர்ந்து, 1906ஆம் ஆண்டு, அப்போதையச் சென்னை அரசாங்கம் “மகோபாத்யாயர்” என்றப் பட்டத்தை வழங்கியது. அதனைத் தொடர்ந்து 1932-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு “தமிழ் இலக்கிய அறிஞர்’ என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது. சுதந்திரம் அடைந்த பின்னர், இவரது தமிழ்த் தொண்டைப் பாராட்டி இந்திய அரசு பிப்ரவரி 18, 2006ம் ஆண்டு, இவரது நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. மேலும், உத்தமதானபுரத்தில் உ.வே.சா வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது. 1942ல் இவர் பெயரால் சென்னை பெசன்ட் நகரில் டாக்டர் உ.வே.சா நூல் நிலையம் அமைக்கப்பட்டு, இன்று வரையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதுதவிர இவரது வாழ்க்கை வரலாறு “தமிழ்த்தாத்தா” எனும் தலைப்பில் தொலைக்காட்சித் தொடராகவும் வெளியானது. ஆனால், இன்னும் எத்தனை விருதுகள் கொடுத்தாலும் இவர் தமிழுக்கும் தமிழருக்கும் செய்த தொண்டு ஈடாகாது.














