தமிழர் இசைக்கருவிகள்

June 21, 2022

மொழிமூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாத ...

மொழிமூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாத காலத்திலேயே மனிதன் தன் உணர்ச்சிகளை ஓசைமூலம் வெளிப்படுத்தினான். மகிழ்ச்சியை ஆர்ப்பரித்தும், பயத்தை இரைந்தும், துன்பத்தை ஓலமிட்டும் மனிதன் வெளிப்படுத்தினான். இவ்வோசைகளே இசைத்தோன்றக் காரணமாய் இருந்தன. எல்லா உயிர்களையும் தன்பால் இசையச் செய்வதால்தான் 'இசை' எனப் பெயரிட்டனர். இசை, பழந்தமிழ் மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து இருந்தது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை என்ற ஐந்து நிலங்களுக்கும் தனித்தனியே யாழ், பறை முதலிய இசைக்கருவிகளும், பண்களும் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளன.

கருவிகளின் துணைக் கொண்டு இசை உருவாக்கப்பட்டது. பழந்தமிழர் இசைக்கருவிகளை நான்கு வகையாகப் பிரித்தனர். அவை தோற்கருவி, துளைக்கருவி, கஞ்சக்கருவி, நரம்புக்கருவி என்பன. குழலும் கோடும் தூம்பும் துளைக் கருவிகள். முழவு, முரசு, பறை, பதலை, துடி போன்றன தோல் கருவிகள். யாழ் என்பது நரம்புக் கருவி. பாண்டில் என்பது கஞ்சக் கருவி. மேலும், ஆகுளி, எல்லரி, தக்கை, தண்ணுமை எனப் பற்பல வாத்தியக் கருவிகள் நற்றிணையின் மூலம் தெரியவருகிறது. அவற்றைப் பற்றிய சிலக் குறிப்புகள்:

யாழ்

தமிழரின் ஆதி இசைக்கருவியாக அறியப்படுவது யாழ் ஆகும். வில்லில் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையே யாழின் உருவாக்கத்திற்கு தோற்றுவாயாக இருக்க வேண்டும். இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது. பண்ணிசைக்கும் பாட்டிசைக்கும் ஏற்றக் கருவியாக யாழ் சங்ககாலத்தில் விளங்கியுள்ளது. யாழில் பல வகைகள் உள்ளன. சிலப்பதிகார உரையில் அடியார்க்குநல்லார் பேரியாழ், மகரயாழ் சகோடயாழ் செங்கோட்டுயாழ் ஆகிய பலவகை யாழ்களைக் குறிக்கிறார். இவை முறையே 21, 19, 14, 7 நரம்புகளை உடையனவாகும். யாழைப் பற்றிய சிறப்பான செய்திகளை விபுலானந்த அடிகளின் யாழ் நூலில் காணலாம். யாழின் வழி வந்த இசைக்கருவிதான் இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கும் வீணையாகும்.

பறை

பறை என்ற இசைக்கருவி தோலிசைக் கருவிகளின் தாய் என்று போற்றப்படுகிறது. பறை என்ற சொல்லுக்குக் கூறுதல், சொல்லல் என்று பொருள் கூறுவர். தொலைதூரத்தில் இருப்பவருக்குத் தகவல்களைச் சொல்ல (பறைய) ஆதி மனிதன் பயன்படுத்தியக் கருவி 'பறை' என்றானது. தீட்டைப்பறை, தொண்டகச் சிறுபறை, தொண்டகப்பறை, அரிப்பறை, மன்றோல் சிறுபறை, மென்பறை, இன்னிசைப்பறை, பொருநர்பறை, ஆடுகளப்பறை எனச் சங்க இலக்கியத்தில் வரும் பலவகைப் பறைகள் தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாகவே இன்றும் திகழ்கின்றன. மனிதனின் இறுதிச் சடங்குகளில் இன்றளவிலும் தவறாமல் இக்கருவி இசைக்கப்படுகிறது.

குழல்

இசைத்தமிழுக்கு அடிப்படையான முதற்கருவி குழல் ஆகும். ஓசை இசையாக மாறிய வளர்ச்சியின் போது தோன்றியதே குழற்கருவி. சிலப்பதிகாரத்தில் உள்ள ஆய்ச்சியர் குரவையிலே கொன்றைக்குழல், ஆம்பர் குழல், முல்லைக்குழல் என 3 வகைக் குழல்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இன்றும் புல்லாங்குழல் பழமை மாறாமல் முன்னிலை வகிக்கிறது.

சங்கு

சங்கு ஓர் இயற்கையான இசைக்கருவி. அதனைக் கோடு, வளை என்று வேறு விதமாகவும் அழைத்துள்ளனர். கோவில்களில் இறைவனை வழிபடும் போதும் இறந்தவர்களின் இறுதிச் சங்கிலும் இன்றும் இது இடம் பெறுகின்றது.

பாண்டில்

பாண்டில் என்பது கஞ்சகக் கருவியாகும். தாளமிடுவதற்காகப் பயன்படுத்துவது.

தூம்பு

தூம்பு என்பது மூங்கிலை அறுத்துக் குழல் போன்று செய்யப்பட்டக் கருவியாகும். இதனை வாங்கியம் என்றும் நெடுவாங்கியம் என்றும் கூறியுள்ளனர். இது யானையின் துதிக்கையைப் போன்றது.

தண்ணுமை

பண்டைத் தமிழ் நாட்டில் தண்ணுமை மிகச் சிறந்த தாளவிசைக் கருவியாக விளங்கியுள்ளது. பெரும்பாலும் போர்க்களத்தில் இதனை இசைத்துள்ளனர். அந்த இசை முழக்கத்தைக் கேட்டுப் போர் வீரர்கள் வீறுகொண்டு வெற்றி வேட்கையுடன் போராடியுள்ளனர் என்று சங்கப் பாடல்கள் கூறுகின்றன. தண்ணுமையிலிருந்து இன்றைய தாளவிசைக் கருவியான மிருதங்கம் தோன்றியிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

யாழ், குழல் போன்ற பழமையான இசைக்கருவிகள் உலகின் பல்வேறு இடங்களிலும் பழங்காலத்தில் இருந்திருக்கின்றன. மேலும் அவற்றின் உருவங்களும் சங்க இலக்கியங்களில் கூறப்பட்டதைப் போலவே இருந்திருக்கின்றன என்பது மிகவும் ஆச்சர்யமான தகவலாகும். ஆனால், சங்ககாலத்தில் மேலோங்கி இருந்த பல இசைக்கருவிகள், காலப்போக்கில் காணாமல் போயின. எனினும் இன்று நாம் கொண்டாடும் இசைக்கருவிகள் அனைத்தும் சங்ககால இசைக்கருவிகளின் நீட்சியே ஆகும்.

35
8
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu