தமிழர் கட்டட அறிவியல் அற்புதங்கள் - தஞ்சைப் பெரிய கோயில்
தமிழினத்தின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழும் தஞ்சைப் பெரியகோயில் 1987ம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இக்கோயில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச் சிலையுருவாக்கம் ஆகியவற்றில் தமிழர்களின் திறமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்தக் கோவில் ராஜராஜேச்சுவரம் என்றும் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
சோழ நாட்டில் அமைந்துள்ள இதர கோயில்களுடன் ஒப்பிடும்போது இக் கோயில் பல்வேறு வகைகளாலும் மாறுபட்டிருக்கிறது. பெரியகோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்துமே கற்களால் ஆனவை. எங்குமே சுதைச் சிற்பங்கள் பயன்படுத்தப்படவில்லை. மரம், இரும்பு, காரை போன்ற எந்தவிதப் பொருள்களையும் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்கக் கற்களை மட்டுமே கொண்டு கட்டப்பட்டது இந்தக் கோயில். மேலும், விமானக் கோபுரத்தின் உட்புறம் உள்ள மேல் அறை ஒன்றில் 108 கர்ணங்கள் கொண்ட பரத நாட்டியச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
இந்தக் கோவிலின் தனிச் சிறப்புகளாவன: கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். இக்கோவிலின் நந்தி இந்தியாவின் இரண்டாவது பெரிய நந்தியாகும். தஞ்சை பெரிய கோயில் விமானம் தென்னிந்தியாவிலேயே மிக உயர்ந்த விமானமாகும். அது கட்டப்பட்ட காலத்தில் இந்த அளவுக்கு உயரமான கட்டடம் உலகிலேயே எங்கும் கட்டப்படவில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பெரியகோயிலின் எடை, சுமார் 1,40,000 டன் என்கிறார்கள் கட்டடக்கலை நிபுணர்கள். 216 அடி உயரம் கொண்ட கோயிலின் அஸ்திவாரம், வெறும் ஐந்தடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். கோயில் அமைந்துள்ள இடம், சுக்கான் பாறையாகும். இந்த இடத்தில் குழி தோண்டி மணலை நிரப்பி, அதன்மீது கோயில் எழுப்பியிருக்கிறார்கள். பூகம்பம் ஏற்படும்போது மணல் அசைந்துகொடுக்க, கோயில் எந்தவித சேதமும் இல்லாமல் அப்படியே நிலைத்து நிற்கும். கிட்டத்தட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைப் போன்றது. இப்பகுதியின் நிலத்தின் தாங்குதிறன் குறித்து ஆராய்ந்ததில் ஒரு சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தின் தாங்குதிறன் 162 டன்களாகும். ஆனால், பெரிய கோயில் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்ட கற்களின் எடையை வைத்துப் பார்க்கும்போது இந்த நிலப்பகுதியில் அதிக அளவாக, ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் 47.40 டன் எடையே கீழ்நோக்கி அழுத்தப்படுகிறது. இவ்வாறு மணற்பாங்கான இடத்திலும், அதன் திறனுக்கேற்ப தமிழர்கள் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து கட்டடங்கள் எழுப்பியுள்ளனர் என்பது தெளிவாகிறது.
இக்கோவில், பலகைக் கற்களை ஒன்றன்மீது ஒன்றாக இலகுப் பிணைப்பு (loose joint ) மூலம் அடுக்கப்பட்டிருக்கிறது. விமானத்தின் உச்சியில் உள்ள கலசத்துக்குக் கீழே சிகரம் போன்று இருக்கும் கல், 8 இணைப்புகளால் ஆனது. இதற்குப் பெயர், பிரம்மாந்திரக் கல். இதன் எடை, சுமார் 40 டன். அதற்குக் கீழே இருக்கும் பலகையின் எடை, சுமார் 40 டன். அந்தப் பலகையில் எட்டு நந்திகள் வீற்றிருக்கின்றன. அவற்றின் மொத்த எடை, சுமார் 40 டன். இந்த 120 டன் எடைதான் ஒட்டுமொத்த கோயில் கோபுரத்தையும் ஒரே புள்ளியில் அழுத்திப் பிடித்து, புவியீர்ப்பு சக்திமூலம் தாங்கி நிற்கிறது. ஆனால் இவையனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்தப்பட்டது என்பதே தமிழர்களின் அறிவியல் மற்றும் தொழில்நுடபத் திறனுக்கான சாதனையாகும்.
இக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் எனக் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க...."
என்று தன்னுடைய பங்களிப்பு மட்டுமன்றி மற்ற எல்லோரின் பங்களிப்பையும் ஆவணப் படுத்தியதே இக்கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழனின் பெருமையாக இருக்கிறது.
மழைநீர் தேங்கி ஆலயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இரண்டு வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு பக்கத்தில் ஒன்றும், தெற்குப் பக்கத்தில் ஒன்றுமாக நீர் வெளியேறும் பாதைகள் உள்ளது. முதலில் அழுக்காக வரும் நீர் தெற்கு பக்கம் மூலமாக நந்தவனத்திற்கும், இரண்டாவது வரும் நல்லநீர் வடக்குப் பக்கமாக சிவகங்கை குளத்திற்கும் செல்லும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது. இன்றும் நாம் முழுமையாக செயல் படுத்த முடியாமல், தோல்வி காணும் மழை நீர் சேமிப்பு திட்டம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தக் கோவிலில் செயல்பாட்டில் உள்ளது மிகவும் வியப்பானதாகும். இது தமிழர்களின் நீர் மேலாண்மைக்கு முக்கியமான சான்றாகும்.
தமிழின் சிறப்புக்களும் மாமன்னர் இராஜராஜ சோழனின் தமிழ் பற்றும் இக்கோவிலின் வடிவத்தில் காட்சி தருகின்றன. அதற்கானச் சான்று:
கோயிலில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் 12 அடி;
தமிழின் உயிர் எழுத்துக்கள் 12!
சிவ லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி;
தமிழின் மெய் எழுத்துக்கள் 18!
கோயிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி;
தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216!
சிவ லிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி;
தமிழின் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247!
தென்னிந்தியக் கோயில்களில் மிகவும் பெரியதும், புகழ் பெற்றதுமான இக் கோயிலை ‘தட்சிண மேரு’ என்றும் அழைக்கின்றனர். இக்கோவிலுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் 1954ம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட 1000 ரூபாய் நோட்டில் தஞ்சை பெரிய கோவிலின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர்கள் உழைப்பின் மேன்மையை உலகுக்குப் பறைசாற்றும் இந்த உன்னதப் படைப்பு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.