18 ஆண்டு கால மலேசிய, இந்தோனேசிய கடல் எல்லை பிரச்சனை முடிவுக்கு வருவதற்கு இன்று முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ தன் மனைவி மற்றும் கேபினட் அமைச்சர்களுடன் 2 நாள் பயணமாக மலேசியா வந்துள்ளார். இந்நிலையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த கடல்வழி எல்லை பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக வலுவூட்டும் வகையில் ஒன்றுபட்டு போராட மலேசியாவும், இந்தோனேசியாவும் ஒப்பந்தம் செய்துள்ளது.
மலாக்கா ஜலசந்தி மற்றும் சுலாவேசி கடற்பகுதிகளில் உள்ள எல்லை நிர்ணயம் சம்பந்தமான இரு ஒப்பந்தங்கள், மலேசியா பிரதமர் அன்வர் இப்ராகிம் மற்றும் இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ ஆகியோர் முன்னிலையில் இன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தங்கள் குறித்து அதிபர் ஜோகோ கருத்து தெரிவிக்கையில், 18 ஆண்டு கால பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, கடல்வழி எல்லை பிரச்சனைக்கு ஒரு தீர்வு எட்டப்பட்டுள்ளது என கூறினார்.