நாசாவின் அடுத்த பெரிய திட்டமான ஆர்ட்டெமிஸ் 3 மிஷன் செப்டம்பர் 2026 இல் நடைபெற உள்ளது. இந்த மிஷனில் சந்திரனுக்குச் செல்லும் விண்வெளி வீரர்கள், பிரபல ஆடம்பர பிராண்டான பிராடா நிறுவனத்துடன் இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனம் வடிவமைத்த விண்வெளி உடைகளை அணிந்து செல்ல உள்ளனர். இந்த உடைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சந்திரனின் தென் துருவம் மிகவும் கடினமான சூழல் கொண்டது என்பதால், அந்த சூழலுக்கு ஏற்ப இந்த விண்வெளி உடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த விண்வெளி உடையில் சாம்பல் மற்றும் சிவப்பு நிறங்களும் கலக்கப்பட்டுள்ளன. இத்தாலியின் பிரபல படகு ரேஸ் போட்டியான லூனா ரோஸ்ஸாவின் வடிவமைப்பைப் போலவே இந்த விண்வெளி உடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த உடைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இவை தீவிர வெப்பநிலை, கதிர்வீச்சு மற்றும் வெளிப்புற அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விண்வெளி வீரர்களைப் பாதுகாக்கும். இதன் மூலம் விண்வெளி வீரர்கள் தொடர்ச்சியாக எட்டு மணி நேரம் வரை சந்திரனில் நடமாடி ஆய்வு செய்ய முடியும். பிராடா நிறுவனம் இந்த விண்வெளி உடைகளை வடிவமைப்பதில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இந்த உடைகள் நீடித்திருக்கும் தன்மை கொண்டதாகவும், விண்வெளி வீரர்களுக்கு வசதியாக இருக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த உடைகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் என்ன என்பது இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.