பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் 100 மணி நேர உரையாடல்கள் அடங்கிய ஆடியோ கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அந்த ஆடியோ ட்ராக் வெப்பில் 3.5 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு ஏஜென்சிகள் இந்த முக்கியமான விஷயத்தை பாதுகாக்காமல் விட்டு விட்டதாகவும் பிடிஐ தலைவர் ஃபவாத் சவுத்ரி கூறியுள்ளார்.
பிரதமரும் அரசு அதிகாரியும் பேசிய ஆடியோ கிளிப்களில் ஒன்றை குறிப்பிட்டு கருத்து தெரிவித்த ஃபவாத், அரசின் நடவடிக்கைகள் குறித்த முடிவுகள் லண்டனில் எடுக்கப்படுவதை இந்த ஆடியோ கசிவுகள் உறுதிபடுத்தியுள்ளன என்றார். மேலும் இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்ட அவர், 2நிமிட ஆடியோவில் பிரதமர் நாட்டை விட தனது குடும்பத்தின் நலனில் தான் அதிக அக்கறை கொண்டிருக்கிறார் என்பது நிரூபணம் ஆகிறது என குற்றம் சாட்டியுள்ளார். ஆடியோ பதிவில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் துணை தலைவரான மரியம் நவாஸ் ஷெரீப், பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், சட்ட அமைச்சர் ஆசம் தரார், உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா மற்றும் முன்னாள் சபாநாயகர் அயாஸ் சாதிக் ஆகியோருக்கும் ஷெபாஸ் ஷெரீப்பிற்கும் இடையேயான உரையாடல்கள் உள்ளன. இதற்கிடையில், பிரதமர் மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவர் நவாஷ் சம்பந்தப்பட்ட ஆடியோ கசிவுகள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்தார். அதுமட்டுமின்றி ஆடியோ கசிவு தொடர்பான விசாரணையில் பல நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளும் ஈடுபடுவார்கள் என்று சனாவுல்லா கூறியுள்ளார். அத்துடன் பிரதமர் மாளிகையின் பாதுகாப்பு மீறப்பட்டதா இல்லையா என்பதும் இந்த விசாரணையில் தெரிய வரும் என்று அவர் கூறினார்.