NEP 2020 மற்றும் புதிய பாடத்திட்ட பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு தேர்வுத் திட்டத்தில் மாற்றம்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026-27 கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த முறை, மாணவர்களின் மனப்பாட திறனைவிட, புரிதல் மற்றும் செயல்திறன் அடிப்படையிலான கற்றலை ஊக்குவிக்கும் வகையில் அமைகிறது. தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) மற்றும் பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCFSE 2023) பரிந்துரைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்படும் இந்த மாற்றம், மாணவர்களின் ஆழமான கருத்துப் புரிதலையும் பிரச்சனை தீர்க்கும் திறனையும் மேம்படுத்தும் நோக்குடன் அமைகிறது. இதே திட்டம் 2014ல் அறிமுகமாகி, 2017ல் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மேம்படுத்தப்பட்ட வடிவில் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது.














