உலகின் மூன்றாவது பெரிய பணக்காரரான கௌதம் அதானியின் மூத்த மகனான கரண் அதானி, குழுமத்தின் சிமென்ட் வியாபாரத்தை மேற்பார்வையிட உள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும்.
வேகமாக விரிவடைந்து வரும் அதானி குழுமம் கடந்த மே மாதம் 10.5 பில்லியன் டாலருக்கு வாங்கிய இரண்டு சிமென்ட் நிறுவனங்களையும் ஒருங்கிணைக்க முயன்றுவருகிறது. தற்போது, 35 வயதாகும் கரண், அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். அவர் குழுமத்தின் துறைமுகங்கள் மற்றும் சிமென்ட் வணிகங்களுக்கு இடையே ஒருங்கிணைந்த தளவாட நிறுவனத்தை உருவாக்குவதற்காக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலக்கரி விலை உயர்வு மற்றும் ஈக்விட்டி ஆதாயங்கள் ஆகியவை அதானி குழுமத்தின் லட்சியங்களை அதிகப்படுத்தியது. அதன் காரணமாக விமான நிலையங்கள், ஊடகங்கள், டிஜிட்டல் சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றில் படுவேகமாக அதானி குழுமம் பன்முக வளர்ச்சியை எட்டியது.
மேலும் பசுமை ஆற்றலில் 70 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளார். அதோடு இந்த ஆண்டு அதானியின் மிகப்பெரிய முதலீடு சிமெண்டிற்காக இருந்தது. கடந்த மே மாதம் சுவிட்சர்லாந்தின் ஹோல்சிம் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் மற்றும் ஏசிசி லிமிடெட் ஆகியவற்றை வாங்குவதன் மூலம் இந்தியாவின் இரண்டாவது பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக இப்பொது ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, இந்திய சிமென்ட் தயாரிப்பு நிறுவனமான ஏசிசி லிமிடெட், கெளதம் அதானியின் மகன் கரண் அதானியை தனது குழுவின் தலைவராக நியமித்துள்ளதாக கூறியது.