தமிழகம் முழுதும் இன்று காலை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த நவம்பர் 9ல் துவங்கி டிசம்பர் 9ல் நிறைவடைந்தது. ஒரு மாதம் காலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நான்கு நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மொத்தம் 23 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றை ஆய்வு செய்து, தகுதியான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
அதன்படி இன்று காலை 10:00 மணிக்கு, அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் , சென்னையில் மாநகராட்சி ஆணையர் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர் . ஏற்கனவே, நவம்பர் 9ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது. அப்போது மொத்தம், 6.18 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,20,41,179 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,04,89,866; பெண் வாக்காளர்கள் 3,15,43,286 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,027 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.














