பேரிடர் அபாய குறைப்பு தொடர்பாக ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் சென்னையில் வரும் ஜூலை 24, 25, 26-ம் தேதிகளில் நடக்க உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2022 டிசம்பர் 1 முதல் 2023 நவம்பர் 30-ம் தேதி வரை நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகிக்கிறது. இந்தியா தலைமையில் ஜி-20ல் பேரிடர் அபாயத்தை குறைப்பதற்கான புதிய பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட பணிக்குழுவின் 3 கூட்டங்களை வெவ்வேறு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி காந்தி நகர், மும்பையில் 2 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
சென்னையில் 3-வது கூட்டம் வரும் ஜூலை 24, 25, 26-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. அப்போது கூட்டத்தை சிறப்பாக நடத்த அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறை செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.