காஷ்மீரில் வருகிற 30-ந்தேதி ராகுல் பாதயாத்திரையின் பிரமாண்ட நிறைவு விழா நடைபெறுகிறது.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி அவர் கன்னியாகுமரியில் தனது யாத்திரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக நடைபயணம் செய்து கடந்த 19-ந்தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குள் நுழைந்தார்.
மொத்தம் 3,970 கிலோ மீட்டர்தூரம் நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் ராகுலின் ஒற்றுமை யாத்திரை வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) நிறைவுபெறுகிறது. இந்த நிறைவு விழாவை மிக பிரமாண்டமாக நடத்த காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்து உள்ளனர். ஸ்ரீநகரில் நடைபெறும் நிறைவு நாள் விழாவில் ராகுல் காந்தி தேசிய கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.