மெரினா கடற்கரை நினைவிடத்தில் கருணாநிதி அருங்காட்சியகம் சுரங்க அறையுடன் உருவாக உள்ளது.
முன்னாள் முதலமைச்சரும் மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி மரணம் அடைந்தார். அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு (42 மீட்டர்) பிரமாண்ட பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படுகிறது. இந்த பிரமாண்ட கட்டுமானத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த பணிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் அவரது சிந்தனைகள் எழுத்தோவியங்கள், இலக்கியம், கதை வசனம், அவர் செயல்படுத்திய திட்டங்கள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் நவீன ஒளி படங்களும் அருங்காட்சியகமாக அந்த நினைவிடத்தில் அமைய உள்ளது. 2 ஆயிரம் சதுர மீட்டர் பரபரப்பளவில் சுரங்க அறையுடன் உருவாகும் இந்த கண்காட்சி ரூ.80 லட்சம் செலவில் கட்ட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 40 சென்ட் நிலத்தில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இப்போது அதை 160 சென்ட் நிலத்தில் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.