ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தியில் உள்ள ராமர் சிலைக்கு திலகமிடும் வகையில் சூரிய ஒளி கற்றை விழுந்துள்ளது. இந்த சூரிய ஒளி நிகழ்வு 3 முதல் 4 நிமிடங்களுக்கு நீடித்தது. இந்த நிகழ்வுக்கு பின்னால் மிகப்பெரிய அறிவியல் உள்ளது.
மிகச் சரியாக 5.8 சென்டிமீட்டர் சூரிய ஒளி கற்றை நேரடியாக ஸ்ரீ ராமரின் நெற்றியில் திலகமாக விழும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, பிரத்தியேகமான கருவி வடிவமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 10 இந்திய விஞ்ஞானிகள் அயோத்தி ராமர் கோவிலில் இந்த நிகழ்வை சாத்தியமாக்கி உள்ளனர். 4 கண்ணாடிகள் மற்றும் 4 லென்ஸ்களை குறிப்பிட்ட வடிவமைப்பில் நிலைநிறுத்தி இதனை சாத்தியப்படுத்தி உள்ளனர். ராமர் கோவிலின் கட்டிட அமைப்பு, பொறியியல் மற்றும் அறிவியல் ஆகியவற்றின் கூட்டமைப்பால் இந்த நிகழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவிலின் மேல் தளத்தில் விழும் சூரிய கதிர்களை கண்ணாடிகள் மற்றும் லென்ஸ் மூலமாக கர்ப்பகிரகத்துக்குள் திருப்பி உள்ளனர். ஒவ்வொரு வருடமும் ஸ்ரீராம நவமி அன்று இந்த நிகழ்வு ஏற்படும் வகையில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளது.