தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 9ல் கவர்னர் உரையுடன் துவங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
2023ம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் 9ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்கும். அன்று சட்டசபை மண்டபத்தில் கவர்னர் உரையாற்றுவார். கவர்னர் உரை முடிந்த பின், அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்யும். தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் 'முக கவசம் பாதுகாப்பானது; அனைவரும் அணிந்து கொள்ளுங்கள்' என தெரிவித்துள்ளார். எனவே எம்.எல்.ஏ.,க்கள் முக கவசம் அணிந்து வருவர்.
கவர்னர் உரை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு, சட்டசபையில் முன் வரிசையில் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், ரகுபதிக்கும் இடையே இருக்கை ஒதுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.