தமிழக சட்டசபையில் சிறப்பு கூட்டம் வருகின்ற 18ஆம் தேதி கூடுகிறது.
தமிழக கவர்னர் ஆர்.என் ரவி மீது தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வழக்கு தொடுத்து இருந்தது. இதில் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பரிசீலனை செய்ய வழிவகை செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது கவர்னர் மீது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மீண்டும் இந்த வழக்கு அடுத்த இருபதாம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் கவர்னர் ஆர்.என் ரவி, பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசு வழங்குவது தொடர்பான மசோதாக்கள் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட மசோதாக்கள் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு அதிரடி முடிவு எடுத்து இந்த மசோதாக்களை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்ப முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழக அரசின் சட்டசபை சிறப்பு கூட்டம் வருகிற 18-ஆம் தேதி கூடுகிறது. இந்த சட்டசபையில் கவர்னர் அனுப்பிய பத்து மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.