தமிழக அமைச்சரவை கூட்டத்தொடர் ஜனவரி 4-ஆம் தேதி கூடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் பொங்கலுக்கு முன்பே ஜனவரி முதல் வாரத்தில் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார். அதில் அரசுத் திட்டங்கள் மற்றும் அரசுத் துறைகளின் செயல்பாடுகள் பற்றி ஆளுநர் குறிப்பிடுவார். தி.மு.க. அரசின் செயல் திட்டம் குறித்தும், அரசு நிறைவேற்ற இருக்கும் புதிய திட்டங்கள் குறித்தும் ஆளுநர் உரையில் வெளியிடப்படும்.
இந்நிலையில், தமிழக அமைச்சரவை ஜனவரி 4ம் தேதி 11 மணிக்கு கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் குறித்தும், கூட்டத்தொடரில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, அ.தி.மு.க. பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எழுப்ப உள்ளது. சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை, நெய் விலை, வெண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவை பற்றி உறுப்பினர்கள் விவாதிக்க வாய்ப்புள்ளது.