சென்னை மற்றும் பல பகுதிகளில் செப்டம்பர் 7-8 ஆகிய நாட்களில் முழு சந்திர கிரகணம் நேரடியாக கருவிகள் இல்லாமல் காணப்படும். இது வானியல் ஆர்வமுள்ள அனைவருக்கும் ஒரு அரிய நிகழ்வாக அமையும்.
செப்டம்பர் 7-ந்தேதி இரவு 8.58 மணியளவில் தொடங்கும் இந்த முழு சந்திர கிரகணம் 8-ந் தேதி அதிகாலை 2.25 மணி வரை நடைபெறும். சந்திரன், பூமி மற்றும் சூரியன் ஒரே நேர்கோட்டில் வருவதால் பூமி சூரிய ஒளியை தடுக்கும் இந்த நிகழ்வில் சந்திரன் சிவப்பு நிறத்தில் ஒளிரும் என்பதால் இதை ‘ரத்த நிலவு’ எனவும் அழைக்கின்றனர். சென்னையில் உள்ளவர்கள் கிழக்கு வானத்தை நோக்கி வெறும் கண்களால் இந்த கிரகணத்தை முழுமையாக பார்க்க முடியும். கிரகணத்தின் முக்கிய கட்டங்கள் பெனும்பிரல் மற்றும் அம்ப்ரா ஆகும்; இரவு 11.41 மணிக்கு முழுமையான கிரகணம் நிகழும். இது ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா போன்ற பல பகுதிகளிலும் தெளிவாக காணப்படும். அடுத்த முழு சந்திர கிரகணம் 2026 மார்ச் 3-ந்தேதி நடைபெறவிருக்கிறது, ஆனால் இந்தியாவில் அதன் முழுமையான பகுதி மட்டுமே காணப்படும் என தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் முன்னாள் இயக்குனர் சவுந்தரராஜ பெருமால் தெரிவித்தார்.














