வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியுள்ள நிலையில் 5 மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள 71 அடி வைகை அணையில் இருந்து ஐந்து மாவட்ட மக்கள் பலனடைந்து வருகின்றனர். இதில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நேற்று நிலவரப்படி 68.50 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 69 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அலையிலிருந்து வினாடிக்கு 2693 கன அடி நீர் வெளி வருகிறது. நீர் இருப்பு 55.62 மி.கன அடி ஆக உள்ளது. அணையின் நீர்மட்டம் 70 அடியை அடைந்தவுடன் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும். இதன் காரணமாக ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணி துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.