தமிழகத்தில் உள்ள தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், ‘தென்னீரா’ என்ற பெயரில் இயற்கை பானம் ஒன்றை தயாரித்துள்ளது. தற்போது, இந்த பானத்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் - அபெடாவின் தலைவர் எம். அங்கமுத்து நிகழ்வை கொடியசைத்து துவங்கி வைத்தார்.
நிகழ்வில் பேசிய அவர், “தென்னீரா பானம் ஏற்றுமதி செய்யப்படுவது நல்ல முயற்சி. இதுபோன்ற முயற்சிகள் அனைத்து மாநிலங்களிலும், அனைத்து பாரம்பரிய பொருட்களின் விற்பனையை மேம்படுத்தவும், மேற்கொள்ளப்பட வேண்டும். தற்சார்பு இந்தியாவுக்கான முயற்சியாக இது அமைந்துள்ளது. இந்த பானத்தை 50 உலக நாடுகளில் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். லூலூ, வால்மார்ட் போன்ற பெரு வணிக வளாகங்களில் முதன்மை பானமாக தென்னீரா பானம் விற்கப்பட வேண்டும்” என்று கூறினார். இந்த பானத்தை வட அமெரிக்க நிறுவனமான ரீஜென்ட் நிறுவனம் இறக்குமதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.