புதுடெல்லி, ஏப்ரல் 27, 2022:
தென்னிந்தியாவில், சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் முன்னணி நிறுவனங்களான, சங்கீதா மொபைல்ஸ், பூர்விகா மொபைல்ஸ், ஹேப்பி மொபைல்ஸ், சென்னை மொபைல்ஸ், பிக் சி மொபைல்ஸ், பாய் இன்டர்நேஷனல், பி நியூ மொபைல்ஸ், செலக்ட் கேட்ஜெட்ஸ், செல் பாயிண்ட் இந்தியா, சுப்ரீம் மொபைல்ஸ், சத்யா ஸ்டோர்ஸ், டார்லிங் டிஜிட்டல் வேர்ல்டு, கிங் மொபைல்ஸ், மேஜிக் மொபைல்ஸ் மற்றும் ப்ரியதர்ஷினி செல் யுனிவர்ஸ் போன்றவற்றிலிருந்து பிரதிநிதிகளை உள்ளடக்கிய Organised Retailer Association (ORA), வின் முதல் சந்திப்பு ஹைதராபாத்தில் உள்ள ITC கோகினூர் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. இந்த அமைப்பின் மூலம் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடுவோரின் வளர்ச்சிக்கானத் தேவைகள், பயிற்சிகள், திறன் மேம்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான அணுகுமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. இணைய வர்த்தகத்தின் அறிமுகத்தாலும், அசுர வளர்ச்சியாலும் சில்லறை வணிகம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எனவே, சில்லறை வர்த்தகத்தின் நலன் கருதி தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் தலைவர் டி எஸ் ஶ்ரீதர், ஜில்லட், நோக்கியா போன்ற பெருநிறுவனங்களின் வர்த்தகத் துறையில் 30 வருடத்திற்கும் மேலான பணி அனுபவம் உள்ளவர். இந்தச் சந்திப்பில் அவர் பேசும்பொழுது, “கைப்பேசி விற்பனையில், இணைய வர்த்தக நிறுவனங்களின் சர்வாதிகாரப் போக்கு மிகவும் நியாயமற்றது. இது கைப்பேசி சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமானோரின் வருங்காலத்தை நிலைகுலையச் செய்கிறது” என்றார். இந்த சந்திப்பின்போது, கைப்பேசியின் அனைத்து மாடல்களும் சில்லரை விற்பனை நிலையங்களில் விற்பனைக்குத் தரவேண்டும் என்று நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், கைப்பேசியை ‘அத்தியாவசியப் பொருட்கள்’ பட்டியலில் இணைத்து, அதற்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு வலியுறுத்தப்பட்டது. மேலும், பண்டிகைக்கால சலுகைகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும் என்று உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும், சில்லறை விற்பனை நிலையங்களிடம் சில மாடல்களை விற்பனைக்குத் தராமல், பாரபட்சம் காட்டும் சீன கைபேசி நிறுவனமான ஒப்போவிற்கு எதிராக, All India Mobile Retailers Association (AIMRA) எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ORA துணை நிற்கும் என்று உறுதியளிக்கப்பட்டது. மேலும் இந்த அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் இணைய வர்த்தகத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதாக உறுதி மொழிந்தனர்.