டிசம்பர் 2-வது வாரத்திற்கு பின் 'மெட்ராஸ் ஐ' இருக்காது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக 'மெட்ராஸ் ஐ' எனும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கண் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், 'மெட்ராஸ் ஐ' பரவல் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகத்தில் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து 'மெட்ராஸ் ஐ' கூடுதலாக பரவி வருகிறது.
‘மெட்ராஸ் ஐ’வந்தவர்கள் தாமாக மருந்தகங்களில் கண் மருந்து வாங்க வேண்டாம். மருத்துவர் அறிவுறுத்தல்படி மருந்து வாங்கி பயன்படுத்த வேண்டும். டிசம்பர் 2-வது வாரத்திற்கு பின் 'மெட்ராஸ் ஐ' இருக்காது. தமிழகத்தில் தினசரி 4,500 பேர் வரை மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் இதுவரை 1.50 லட்சம் பேருக்கு மெட்ராஸ் ஐ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.