மனோஜித் முந்தால் என்ற தொழிலதிபர், தனது டாடா நானோ காரை சூரிய சக்தியில் இயங்குமாறு மாற்றி அமைத்துள்ளார். மேலும், அவரது டாடா நானோ கார், வெறும் 30 ரூபாய்க்கு 100 கிலோமீட்டர் தூரம் வரை செல்வதாக தெரிவித்துள்ளார். மேலும், அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகம் வரை செல்ல முடியும் எனவும் கூறியுள்ளார். அதே வேளையில், தனக்கு அரசாங்கத்திடம் இருந்து உரிய அங்கீகாரம் மற்றும் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
“தற்போதைய நிலையில், உலகமே மின்சார வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் நிலையில், எனது பரிசோதனை முயற்சிக்கு அரசாங்கத்திடமிருந்து உரிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. எனவே, நான் என்னிடம் இருந்த டாடா நானோ காரை மாற்றி அமைத்துள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.
டாடா நானோ இந்தியாவின் விலை குறைந்த காராகும். கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த வாகனம், அரசாங்கத்தின் கார்பன் வெளியேற்ற கொள்கைகள் காரணமாக 2018 உடன் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மனோஜித் முந்தாலின் சோலார் டாடா நானோ கார் கவனம் ஈர்த்துள்ளது.