கல்வி நிறுவனங்களில் நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்கும் வகையில் ஆசிரியர் நியமன நடைமுறைகளை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய தமிழக பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்த நித்யா என்பவர் ஆங்கில பாடப்பிரிவிற்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் நீதிபதிகள், தொலைதூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் அல்ல. இட ஒதுக்கீட்டின் கீழ் நியமனம் மேற்கொள்வதாக இருந்தாலும் கூட, தகுதியானவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். மேலும், ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான திட்டத்தை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.