கழிவு பஞ்சில் நூல் உற்பத்தி செய்வது ஓபன் எண்ட் மில் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓபன் எண்ட் மில்கள், வேலை நிறுத்த போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளன. கழிவு பஞ்சு விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை எதிர்த்து, இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 1000 க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளன. குறிப்பாக, மங்கலம், காரணம்பேட்டை, பல்லடம், உடுமலை, வெள்ளகோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள நூற்பாலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால், ஒரு நாளுக்கு 1500 டன் நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், 5000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.














