பெங்களூருவில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது.
பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் வழியாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் நெல்லை திருச்செந்துார் நாகர்கோவில் திருவனந்தபுரம் வழித்தடத்தில் தலா 28 பேருந்துகள் இரண்டு மார்க்கத்திலும் இயக்கப்படுகின்றன. மேலும், 17 பேருந்துகள் சேலம் நாமக்கல் கரூர் வழியாக திருச்சி ராமநாதபுரம் சிவகங்கை தேனி மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன.
வரும் அக்டோபர் 4 மற்றும் சரஸ்வதி பூஜை அக்டோபர் 24 தீபாவளி பண்டிகைக்கான எஸ்.இ.டி.சி. பேருந்துகளின் முன்பதிவு நேற்று முன்தினம் துவங்கியது. அனைத்து டிக்கெட்டுகளும் பெங்களூருவிலேயே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. சேலம் நாமக்கல் கரூர் உள்ளிட்ட வழித்தட மாவட்டங்களுக்கு இந்த பேருந்துகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 'சீட்'களின் முன்பதிவும் முடிந்து விட்டது. இதனால் நேற்று ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத நிலையில் இன்று பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களுக்கு சென்ற பயணியர் முன்பதிவு முடிந்து விட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அதே நேரத்தில் சிறப்பு பேருந்துகளின் இயக்கத்துக்கு அதிகாரிகள் சென்னைக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனால் இந்த வழித்தடத்தில் இயங்கிய பேருந்துகளில் 25 சதவீதத்தை சென்னைக்கு திருப்பி விட்டுள்ளனர். எஸ்.இ.டி.சி. பேருந்துகளின் முன்பதிவு முடிவுக்கு வந்து விட்டதால் சேலம் கோட்டத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்து களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.